குமரியில் தீபாவளி பண்டிகை களை கட்டியது… கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.!

9 November 2020, 7:37 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகை களைகட்டியுள்ளது. பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவதற்காக இன்று கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது .கொரோனா தொற்றுக்கு மத்தியில் தீபாவளி பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக மக்கள் தயாராகி வருகின்றார்கள். பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. அதிலும் விடுமுறை நாளான நேற்றும் இன்றும் புத்தாடை எடுக்கவும், பட்டாசுகள் வாங்கவும் பொதுமக்கள் நகரின் முக்கிய பகுதிக்கு திரண்டனர். இதனால் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நாகர்கோவில் மார்த்தாண்டம் ,கருங்கல் ,களியக்காவிளை, தக்கலை ,கன்னியாகுமரி உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நாகர்கோவில் நகரில் செம்மங்குடி சாலை, கலெக்டர் அலுவலகம் , மணிமேடை சந்திப்பு ,பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை ,கேப் ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது .இது போல வடசேரி கிருஷ்ணன்கோவில் சந்திப்பு ஆகிய பகுதிகளிலும் மக்கள் கூட்டம் இருந்தது. பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே இருப்பதால் பொதுமக்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் போட்டி போட்டு பொருட்களை வாங்கி சென்றனர். கூட்டம் காரணமாக பல்வேறு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Views: - 20

0

0