பாமக மாநில துணை செயலாளரை தாக்கிய திமுகவினர்: பாமகவினர் சாலை மறியல்

Author: Udhayakumar Raman
23 March 2021, 2:16 pm
Quick Share

திண்டுக்கல்: பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை செயலாளரை திமுகவைச் சேர்ந்த ஊராட்சி துணைத்தலைவர் உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது தீவிரமாக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமி போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக கூட்டணியின் சார்பாக பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மாநில பொருளாளர் திலகபாமா போட்டியிடுகிறார். இந்நிலையில் இருவரும் சாத்தூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இன்று பாட்டாளி மக்கள் கட்சி மாநில செயலாளர் கூத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி துணைத்தலைவர் காங்கேயன் பாட்டாளி மக்கள் கட்சிக்காக பிரச்சாரம் செய்தவர்களை உருட்டுக்கட்டையால்தாக்கி இப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என மிரட்டியதாக பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திலகபாமா தகவல் தெரிவித்தனர். உடனடியாக கூத்தம்பட்டி ஊராட்சி பகுதிக்கு வந்த வேட்பாளர் திலகபாமா மற்றும் அதிமுக, பாஜக, பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் உடனடியாக திமுக ஊராட்சி துணை தலைவரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Views: - 50

0

0