சுரங்கபாதை பணி பூமி பூஜையின் போது தி.மு.க -பா.ஜ.க வினர் மோதல்

11 November 2020, 8:34 pm
Quick Share

வேலூர்: சத்துவாச்சாரி அருகே சுரங்கபாதை பணி பூமி பூஜையின் போது தி.மு.க -பா.ஜ.க வினர் மோதல் ஏற்பட்டது.

வேலூர் சத்துவாச்சாரியில் ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் இருந்து கெங்கையம்மன் கோவில் இடையே தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கிறது.இதனை தடுக்க அந்த பகுதியில் சுரங்க பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கெங்கையம்மன் கோவில் அருகே ரூ.1.80 கோடியில் சுரங்க பாதை அமைக்க பட உள்ளது. முதற்கட்டமாக 6 வழிச்சாலையில் பெங்களூர் சென்னை செல்லும் வழித்தடத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சுரங்கப்பாதை பணிக்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது .இதில் கலெக்டர் சண்முகசுந்தரம் பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் நாராயண ரெட்டி,
தலைமை அலுவலர் துரைராஜ், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் ஜெயக்குமார், சாம்சன், பெரிய துரை தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் வி. எஸ் .விஜய், நீலகண்டன் மற்றும் தாசில்தார் ரமேஷ், மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது பா.ஜ.கவினர் அவர்களது கட்சி கொடியுடன் அங்கு வந்தனர்.

அரசு விழாவுக்கு தங்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என அவர்கள் கேள்வி எழுப்பினர். இதைக் கேட்டு அங்கிருந்த தி.மு.கவினர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் பா.ஜ.கவினரை நோக்கி ஆவேசமாக பேசத் தொடங்கினர்.இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். பின்னர் பா.ஜ.கவினரை கட்சிக்கொடி இல்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதனையடுத்து பா.ஜ.கவினர் கலெக்டருக்கு சால்வை அணிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். கலெக்டர் சண்முகசுந்தரம், தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த் ஆகியோர் முன்பு நடந்த சம்பவத்தால் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலைக்கு கீழ் 5 மீட்டர் அகலத்தில் சுரங்க பாதை அமைய உள்ளது.6 மாதத்தில் பணிகள் நிறைவு பெறும் என தெரிவித்தனர். அது வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் சாலையை கடக்க கோவை ஜூஸ் அருகே உள்ள பாதையை பயன் படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 20

0

0