மருத்துவமனையில் பணி வழங்குவதாக இணையதளத்தில் போலி விளம்பரம்: விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்

Author: Udayaraman
10 October 2020, 9:04 pm
Quick Share

வேலூர்: வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் பணி வழங்குவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து பணம் பெற்று பலரிடம் மோசடி செய்த போலி டாக்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கல்புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார் என்பவரின் மகள் அனிதா இவர் பிபிஏ படித்துவிட்டு காந்தி நகரில் உள்ள ஒரு கணினி மையத்தில் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தார். கொரோனா சமயத்தில் வேலை இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான சி,எம்.சி மருத்துவமனையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த அனிதா அதில் உள்ள செல்பேசி எண்ணை தொடர்புகொண்ட போது சி.எம்.சி மருத்துவமனையில் பணிபுரிவதாகவும், டாக்டர் உதயகுமார் என ஒருவர் பேசியுள்ளார்.

அனிதாவுக்கு பார்மசி டிபார்ட்மெண்டில் வேலை வழங்குவதாக கூறி உதயகுமார் நேரில் வந்து ரூ.50 ஆயிரம் பணம் பெற்று சென்றுள்ளார். பின்னர் அனிதாவை சி,எம்.சி மருத்துவமனையில் மற்றொரு பெண் டாக்டரிடம் வேலை உடனடியாக வழங்க போனில் பேச வைத்துள்ளார். ஆனால் வேலை கிடைத்தபாடில்லை. இதனால் இவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். உதயகுமாரே பெண் குரலில் தொலைபேசியில் தாங்கள் முழு பணத்தையும் கொடுத்தால் பணிக்கு சேர்ப்பதாக கூறியுள்ளார். கடந்த 21 ஆம் தேதி இவரது செல்போன் முழுமையாக ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது.

இதனால் சந்தேகமடைந்த அனிதா சி.எம்.சி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்தார். டாக்டர் உதயகுமார் என யாரும் இங்கு பணிபுரியவில்லை தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள் என மருத்துவமனை நிர்வாகம் எடுத்து கூறியது. இதனால் தன்னை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனிதா காட்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கீழ்மணவூர் பகுதியை சேர்ந்த உதயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இவர் சி.எம்.சி மருத்துவர் என கூறிகொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர் மீது வேலூர், பாகாயம் ஆகிய காவல்நிலையங்களிலும் புகார்கள் உள்ளது .போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு , இந்த நபருடன் வேறு கும்பலுக்கு தொடர்புள்ளதா என விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இவர் கொரோனா பரிசோதனைக்கு பின் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 30

0

0