மதுரையில் போலி பெண் டாக்டர் கைது

27 September 2020, 3:28 pm
Quick Share

மதுரை: மதுரை கீரைத்துறை பகுதியில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த பரிமளா என்பவர் கைது செய்யப்பட்டார். நான்கு ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த நிலையில் பரிமளாவை கைது செய்து அவரிடமிருந்து மருந்து பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

மதுரை தெற்கு வட்டம் கிராம நிர்வாக அலுவலர் சேகர் என்பவர் மதுரை கீரைத்துறை பகுதியில் இருளப்பன் கோவில் தெருவில் வந்தபோது குலலா மணியம்மாள் காம்பவுண்டில் கூட்டமாக நின்று கொண்டிருந்த பெண்களை அழைத்து விசாரித்தார். அதில் ஒரு நபர் தனக்கு கால் வலி இருப்பதாகவும், அதற்கு மேற்படி காம்பவுண்டிற்குள் குடியிருக்கும் பாக்கியம் மனைவி பரிமளா என்பவர் அவரது வீட்டில் மருந்து மாத்திரைகளை வைத்து வைத்தியம் பார்ப்பதாகவும், அவரிடம் கால் வலிக்கு ஊசி போட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து உள்ளே சென்ற அதிகாரிகள் விசாரணை செய்தபோது பரிமளா என்ற பெண் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும் அவரது வீட்டிற்குள் ஆங்கில மருந்துகள் மற்றும் அதனைச் சார்ந்த உபகரணங்கள் இருந்தது தெரியவந்தது.

முறையாக ஆங்கில மருத்துவம் செய்யும் தகுதி ஏதும் பெறாமலும் மருத்துவம் சம்பந்தப்பட்ட எந்த படிப்பும் படிக்காமலும் மருத்துவம் படித்தவர் போல் பாவனை செய்து கடந்த நான்கு வருடமாக அவரது வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கீரைத்துறை காவல் நிலையத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் சேகர் தகவல் அளித்தார். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கீரைத்துறை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

Views: - 10

0

0