மக்காசோள படைப்புழு தாக்குதலில் வெற்றிகண்ட விவசாயி – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

By: Udayaraman
6 October 2020, 8:00 pm
Quick Share

அரியலூர் மாவட்டத்தில் மானாவாரி பயிராக சுமார் 20 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக மக்காசோளத்தில் படைப்புழு எனப்படும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டம் அடைந்து வந்தனர். இதையொட்டி விவசாயிகளையும மக்காச்சோளத்தையும் காப்பாற்றும் வகையில் மத்திய மாநில அரசுகள் மூலம் வேளாண்மை துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாலாஜநகரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற விவசாயி ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு என்ற முறையில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி உள்ளார். இவரது வயலை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது மக்காசோளம் விதைக்கும் போதே இயற்கை உரத்துடன் வேப்பம் புண்ணாக்கு கலந்து அடியுரமாக இட்டு மக்காச்சோளத்தை சாகுபடி செய்ததால் படைப்புழு தாக்குதல் குறைந்துள்ளது எனவும்,

மேலும் அவ்வப்போது அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காணப்பட்ட நிலையில் வேளாண்மை துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்ட மெட்டாரைசியம் என்ற உயிரியியல் பூஞ்ஞான பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்ததால் படைப்புழு தாக்குதல் முற்றிலும கட்டுப்படுத்தப்பட்டு தற்போது விளைச்சல் தரும் தருவாயில் மக்காச்சோளம் உள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் கூறினார்.

இம்முறையை அனைத்து விவசாயிகளும் மேற்கொண்டு படைப்புழு தாக்குதலிலிருந்து மக்காச்சோள பயிரை காப்பாற்ற வேண்டும் என்றும் இதற்கான அனைத்து ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்புக் கொண்டு விவசாயகள் பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்னா கேட்டுக்கொண்டார்.

Views: - 40

0

0