மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

1 March 2021, 3:48 pm
Quick Share

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே உரிய நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூர்.எரிச்சி, தாந்தாணி,சிட்டாங்காடு,மேலப்பட்டு உள்ளிட்ட கிராம பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் மேலும் எவ்வாறு சேதங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த விவசாயிகளுக்கு எத்தனை சதவீதம் பயிர்ச் சேதம் கணக்கிடப்பட்டுள்ளது.

முறையாக அளவீடு செய்து தகுந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா என வேளாண் விரிவாக்க அலுவலர் முறையாக தகவல் தர மறுக்கிறார். அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் இல்லையெனில் இன்னும் பெருமளவில் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என கூறினார். பின்னர் தகவலறிந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் ரேஷ்மா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தார்.

Views: - 1

0

0