தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் அடகு வைத்த நகை விற்பனை: ஊழியர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Author: Udhayakumar Raman
2 September 2021, 8:29 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே விவசாயிகள் அடகு வைத்த நகையை விவசாயிகளுக்கு தெரியாமல் கள்ளத்தனமாக விற்பனை செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள தொகுதிக்கு உட்பட்டது கடம்பூர் கிராமம். இந்த கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கடன் சங்கத்தில் கடம்பூர், மரூர், ம.புதூர், ஓடியந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்கு வைத்து தங்கள் பணத்தை பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை முறையாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நகை திருப்பும்போது முறையாக கொடுப்பதில்லை என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி தவித்து வந்தனர்.

இதனிடையே இன்று ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களை முற்றுகையிட்டு தாங்கள் அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் அதற்கு ஊழியர்கள் தகுந்த பதில் சொல்லாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சங்கராபுரம் – திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தங்கள் நகைகளை பெற்றுத்தர உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பொது பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆத்திரம் அடைந்த கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிவமூர்த்தி என்ற விவசாயி என்னுடைய நகைகளை உடனே தரவில்லை என்றால் இதே இடத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி தங்கள் நகைகளை பெற்றுத்தர முறையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கேயே அமைதி காத்து வருகின்றனர். காவல்துறையினர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார். கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 200 பவுன் தங்க நகைகள் முதல் 500 பவுன் தங்க நகைகள் வரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 77

0

0