தேசிய வன மகோத்சவத்தை முன்னிட்டு 4 மாவட்டங்களில் 20 ஆயிரம் மரங்களை நட்ட விவசாயிகள்!!

10 July 2021, 11:56 am
Quick Share

தேசிய அளவில் கொண்டாடப்படும் ‘வன மகோத்சவத்தை’ முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக கோவை, திருப்பூர், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்தனர்.

இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் ‘வன மகோத்சவம்’ (வன திருவிழா) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாட்டின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கமான காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் 18 ஏக்கரில் 4,150 மரங்களும், திருப்பூரில் 26 ஏக்கரில் 4,550 மரங்களும், நாமக்கலில் 31.5 ஏக்கரில் 7,290 மரங்களும், கரூரில் 18 ஏக்கரில் 4,400 மரங்களும் விவசாயிகளால் நடப்பட்டது. சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக, தேக்கு, செம்மரம், சந்தனம், மகோகனி, வேங்கை, மலை வேம்பு போன்ற பண மதிப்புமிக்க மரங்கள் நடப்படுகின்றன. காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் விவசாய நிலங்களின் மண் மற்றும் நீரின் தரத்தை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மர வகைகளை பரிந்துரை செய்தனர்.

இதற்கு முன்பு வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார், திரு.நெல் ஜெயராமன், திரு.மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்தது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் சத்குரு அவர்களால் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 1.1 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டுள்ளனர். ஆன்லைனில் விவசாய கருத்தரங்கு மரம் நடும் நிகழ்வுகளுடன் சேர்த்து சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் லாபகரமான வேளாண் காடு வளர்ப்பு முறையை எப்படி உருவாக்குவது என்பது குறித்த சிறப்பு ஆன்லைன் கருத்தரங்கம் ஜூலை 7-ம் தேதி நடைபெற்றது.

இதில் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வன கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் டீன் திரு.பார்த்திபன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் திரு.கே.எம்.சிவக்குமார், சுரேஷ் டிம்பர் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.சுரேஷ் கண்ணன், ஷோபா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.ஹரீஷ் பாபு மற்றும் முன்னோடி விவசாயிகள் திரு.செந்தில் குமார், திரு.அமர்நாத் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர்.

Views: - 86

0

0