திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றத்தை கொடுத்து விடுமோ என்ற அச்சம்:த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி…

Author: Udhayakumar Raman
6 September 2021, 8:32 pm
Quick Share

தூத்துக்குடி:  திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விடுமோ என்ற அச்சம் ஆரம்பித்துள்ளதாக த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. இன்று தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். சரக்கு ஏற்றுமதி-இறக்குமதி மென்மேலும் உயரக்கூடிய வகையில் விமான நிலைய விரிவாக்கத்தையும் உறுதி செய்யவேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முழுமனதோடு வரவேற்கிறது.

கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கூட கொரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளதை தமிழக அரசு தகுந்த முன் ஜாக்கிரதையோடு கையாள வேண்டும். அனைவருக்கும் கொரோனா பரவாத வகையில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். உள்ளாட்சித் தேர்தலில் த.மா.கா. வெற்றி பெறக்கூடிய இடங்களை தேர்வு செய்து அதில் போட்டியிடுவதற்கான வாய்ப்பினை கேட்டுபெறுவோம்.

திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் மக்களின் ஒரே எண்ணம். வாக்குறுதிகளை அள்ளி கொடுத்திருக்கிறார்கள். அதை நம்பியே மக்களும்  வாக்களித்திருக்கிறார்கள். மக்களுக்கு திமுக அரசு ஏமாற்றத்தை கொடுத்து விடுமோ என்ற எண்ணம் ஆரம்பிக்கத் தொடங்கி உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளில் முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடிய நிலையில் செயல்பட வேண்டும். குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய், நகை கடன் தள்ளுபடி, பயிர்க் கடன் தள்ளுபடி, மாதம் ஒருமுறை மின்சாரம் ரீடிங் எடுப்பது போன்ற அறிவிப்புகள்  கிடப்பில் கிடக்கிறது என சந்தேகம் எழுகிறது. எனவே அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Views: - 76

0

0