கும்பகோணத்தில் நிதிநிறுவன மோசடி வழக்கு; நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது

Author: Udhayakumar Raman
25 July 2021, 4:56 pm
Quick Share

கும்பகோணம்: கும்பகோணம் நிதிநிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஊழியர்கள் 2 பேர் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து இரவு வெளியூருக்கு தப்ப முயன்றபோது போலீசாரால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டனர்.

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ். இவரது சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன். இவர்கள் தங்களது வீட்டிலேயே நிதி நிறுவனம் நடத்தி அந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பாக தொகை வழங்கப்படும் என கூறியதால் கும்பகோணத்தில் ஏராளமானோர் பல கோடி ரூபாயை முதலீடு செய்தனர். ஆனால் யாருக்கும் முதிர்வு தொகை கொடுக்கவில்லை. இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த ஜபருல்லா – பைரோஜ்பானு தம்பதியினர் தங்களுக்கு முதலீடு செய்த ரூ.15 கோடி தராமல் ஏமாற்றியதாக தஞ்சை எஸ்.பியிடம் புகார் செய்தனர்.

இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் மற்றும் அந்நிறுவனத்தில் கணக்காளர்களாக பணியாற்றிய அக்கா, தம்பியான மீரா, ஸ்ரீராம் ஆகியோர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி இருந்த அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் நிதிநிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த மீரா மற்றும் அவருடைய தம்பி ஸ்ரீராம் ஆகியோர் பேருந்து மூலம் வெளியூருக்கு தப்பிச்செல்ல முயல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மீரா மற்றும் ஸ்ரீதர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு முன்ஜாமீன்கோரி செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றங்கள் இருக்காது எனவே எங்கு செல்கிறீர்கள் என்பதை தெரிவியுங்கள் என போலீஸார் கேட்டதற்கு இருவரும் சரியான பதில் அளிக்காததால் அவர்களை கைது செய்து மீராவை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, ஸ்ரீதரை கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கும் கொண்டு சென்றனர்.

Views: - 163

0

0