மீனவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி கடலில் இறங்கி போராட்டம்

18 July 2021, 5:45 pm
Quick Share

மயிலாடுதுறை: சீர்காழி அருகே மடவாமேடு மீனவர் கிராமத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி திடீரென கடலில் இறங்கி போராடியதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் நேற்றிலிருந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுருக்கு மடி வலைக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் இல்லை என்றால் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983ம் ஆண்டு இயற்றப்பட்ட 21 வகையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். சீர்காழி தாலுகாவில் பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு மற்றும் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாபு கிராமத்தில் விடுதலைக்கு ஆதரவான 15 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு மேற்பட்டமீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக் கோரி நேற்றிலிருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் ரெட்சல் மற்றும் உதவி இணை இயக்குனர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் மீனவர்களின் கோரிக்கையை அரசிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்க மறுத்த மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்து கலைந்து சென்றனர் அதனை தொடர்ந்து மீனவர்கள் இரவு நேரத்திலும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர் இன்று 2-வது நாளாக மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மடவாமேடு மீனவ கிராமத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி திடீரென கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களது போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிர படுத்த போவதாகவும், ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டைகளை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Views: - 91

0

0