ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Author: Udhayakumar Raman
16 September 2021, 4:58 pm
Quick Share

தருமபுரி: கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 17 ஆயிரம் கன அடி உபரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் இன்று வந்தடைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் முழு கொள்ளளவை எட்டி வருகிற நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு கடந்த இரு தினங்களுக்கு முன்பு 17,651 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த கொள்ளளவான 124.80 அடியில் தற்போது 116.44 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 15,730 கன அடியாக உள்ள நிலையில் விநாடிக்கு 10,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையின் மொத்த கொள்ளளவான 84 அடியில் தற்போது 83.45 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 12,000 கன அடியாக உள்ள நிலையில் அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் கர்நாடக மற்றும் தமிழகம் எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை முதலே படிப்படியாக நீர் அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை நேர நிலவரப்படி விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த தண்ணீர் தற்போது அதிகரித்து விநாடிக்கு 17000 கன அடியாக வருகிறது. இந்த நீர் வரத்தால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

நேற்று கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 22 ஆயிரத்து 900 கன அடி நீர் இன்று அல்லது நாளை காலைகுள் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தருமபுரி மாவட்ட நிர்வாகம் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை விதிக்கபட்டுள்ளது.

Views: - 162

0

0