பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆற்றில் குளிக்க, துணி துவைக்க பொதுமக்களுக்கு தடை: தண்டோரா மூலம் அறிவிப்பு

Author: Udhayakumar Raman
24 October 2021, 4:57 pm
Quick Share

வேலூர்: பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் ஆற்றில் குளிக்க, துணி துவைக்க , செல்பி எடுக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கீரைசாத்து கிராமத்தில் பொன்னை அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணையிலிருந்து 4,500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொன்னை அணைக்கட்டு நிரம்பி, விநாடிக்கு 4,500 கனஅடி உபரிநீரானது கிழக்கு மற்றும் மேற்குப்புற கால்வாய்கள் மற்றும் பொன்னையாற்றின் வழியாக செல்கிறது.இந்த மேற்குப்புற கால்வாய், காட்பாடி வட்டத்தில் உள்ள கொண்டமநாயுடுபாளையம், மாதாண்டகுப்பம், பொன்னை, மேல்பாடி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், தேன்பள்ளி, வள்ளிமலை, இளையநல்லூர், கொடுக்கந்தாங்கல், குகையநல்லூர், திருவலம், கார்ணாம்பட்டு, ஏரந்தாங்கல் ஆகிய கிராமங்களின் வழியே செல்கிறது.

மேற்படி பொன்னை அணைக்கட்டிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரானது மேலே குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்கள் வழியாக செல்லும் என்பதால், மேற்கு கால்வாயானது திருவலம் கிராமத்தில் உள்ள பாலாற்றில் கலக்கும் வரையில் உள்ள மேற்குறிப்பிட்ட கிராமங்களில் கால்வாயின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், பொன்னை அணைக்கட்டு மேற்கு கால்வாயில் எந்நேரமும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், மேற்படி கால்வாயில் குளிப்பது மற்றும் துணிகள் துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும், மேற்படி கால்வாய் மற்றும் பொன்னை ஆறு ஆகியவற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், சிறுவர்களை குளிக்கவோ, அலைபேசி மூலம் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்வதோ, விளையாடவோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது எனவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் கிராம பகுதிகளில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Views: - 429

0

0