சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜாமீன் கோரி மனு தள்ளுபடி
25 August 2020, 5:54 pmமதுரை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜாமீன் கோரி நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த 15 வயது சிறுமி வாலிபர் ஒருவருடன் சில நாட்களுக்கு முன்பாக மாயமானார். அது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருவரையும் மீட்டு விசாரித்தனர். அப்போது சிறுமி, கடந்த சில ஆண்டுகளாக தனது தாயாரின் ஒப்புதலுடன் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட பலர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அவருடைய மனுவில்,” 2017 ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடும் நிலையில் அப்போதெல்லாம் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. ஏதோ உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புனையப்பட்ட வழக்காக உள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், அந்த பெண் ஒரு வாலிபருடன் ஓடி சென்று விட்டார். அவரை மீட்க முன்னாள் MLA, உதவினார். இதனால் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, 2017 ல் நடந்த சம்பவம் என்றார். அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளது என கூறினார். பல ஆண்டுகள் கழித்து தாமதமாக புகார் கூறப்பட்டுள்ளது என்ற மனுதாரரின் வாதம் ஏற்க முடியாது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். தன் மகளின் வாழ்க்கையை , அவரது தாய் கெடுத்துள்ளார் என கருத்து தெரிவித்து, மனு தாரர் ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெறுகிறா அல்லது உத்தரவு பிறப்பிக்கவா என கூறினார். இதை தொடர்ந்து மனுதாரர் மனுவை வாபஸ் பெறுவதாக கூறியதை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.