இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் கும்பல்: கடத்தலில் ஈடுப்பட்ட 2 பேர் கைது

2 March 2021, 10:48 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரத்தில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 1 1/4கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போலீசார் தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் செல்லும் சாலையில் உள்ள கோனேரிப்பட்டி அருகே சோதனை சாவடி அமைத்து அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வரும் வாகனங்களையும், நபர்களையும் விசாரணைக்குப் பின் அனுப்பி வைக்கின்றனர். இந்த நிலையில் சோதனைச் சாவடி போலீசாருக்கு இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இரு சக்கர வாகனம் ஒன்றில் அவ்வழியாக வந்த இரண்டு இளைஞர்களை தடுத்து நிறுத்தி அவர்களை விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறியதுடன், அவர்களது இடுப்பு பகுதியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா மறைத்து வைக்கப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் பெரிய குளத்தை சேர்ந்த முத்துராஜ், வத்தலக்குண்டு சேர்ந்த காஜாமைதீன் என்பதும், இவர்கள் இருவரும் கம்பம் பள்ளத்தாக்கு, தேனி, பகுதியிலிருந்து போதைப் பொருளான கஞ்சாவை கடத்தி சென்று கோவை, திருப்பூரில் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த தாராபுரம் போலீசார் அவர்களிடமிருந்து 1 1/4 கிலோ (ஒன்றேகால் கிலோ) பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரையும் தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாராபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

Views: - 3

0

0