சென்னையில் கழிவுநீர் குழாய் உடைந்து சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம்…

Author: kavin kumar
8 October 2021, 2:06 pm
Quick Share

சென்னை: புளியந்தோப்பு பகுதியில் கழிவுநீர் குழாய் உடைந்து சாலையில் மாணவ , மாணவியர்கள் சாலையில் நடந்து செல்லும் போது ராட்சத பள்ளம் ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் இருந்து புரசைவாக்கம் நோக்கி செல்லும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் திடீரென்று சாலையில் ராட்சத பள்ளம் ஒன்று ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் இது குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீசார் உடனடியாக அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். பட்டாளம் வழியாக செல்லும் வாகனங்கள் ஓட்டேரி மற்றும் சூளை வழியாக திருப்பி விடப்பட்டன. புரசைவாக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் தானா தெரு வழியாகவும் , சூளை வழியாகவும் திருப்பி விடப்பட்டன. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு நேரில் வந்த 6 வது மண்டலம் குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அதில் பள்ளம் விழுந்த பகுதியில் 1200 மில்லி மீட்டர் அளவு கொண்ட கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு அது வெடித்து அதன் அருகே இருந்த மண் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு ராட்சத பள்ளம் விழுந்தது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய ஊழியர்கள் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் , வாகனங்கள் மற்றும் மாணவ , மாணவியர்களும் , பொதுமக்களும் சென்று கொண்டு இருக்கும் இப்பகுதியில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Views: - 114

0

0