ஏழு பேரை விடுவிக்காவிட்டால் வருகிற 30-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை: தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன்

18 November 2020, 7:51 pm
Quick Share

கோவை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரை விடுவிக்காவிட்டால் வருகிற 30-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிட உள்ளதாக தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்ட ஏழு பேரை( முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன்) உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

ராஜீவ் காந்தி வழக்கில் கொலை செய்யப்பட்ட ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இராமகிருட்டிணன், தமிழக சட்டமன்றம் அவர்களை விடுதலை செய்து கொள்ளலாம் என்று கூறியும் தமிழக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், நீதிபதி சிபிஐ அதிகாரிகள் சிலர் கூட பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி விடுதலை செய்யாமல் 29 ஆண்டுகளாக சிறையில் வைத்து கொடுமை செய்து வருகின்றனர் என்றும் கூறினார்.

மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை ஆயுள் தண்டனையின் காலம் என்பது அதிகபட்சமாக 10 ஆண்டுகள் இருக்கும் நிலையில், இவர்கள் மட்டும் 29 ஆண்டு காலமாக சிறையில் அடைத்து வைத்து கொடுமை செய்யப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். காந்தியை கொல்வதற்கு துணையாக இருந்த கோட்சே கூட பத்து ஆண்டுகளில் சிறையிலிருந்து வெளிவந்த நிலையில், இவர்களுக்கு மட்டும் ஏன் 29 ஆண்டுகள் ஆகியும் கூட சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கவில்லை. உடனடியாக 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் இல்லை எனில் வருகிற 30-ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையை முற்றுகை இடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.