கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை: நீரில் மூழ்கி நெல் வயல்கள் சேதம்

5 November 2020, 2:26 pm
Quick Share

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவில் பெய்த கனமழையினால் கீரிப்பள்ளம் ஓடை மற்றும் தடப்பள்ளி வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நெல் வயல்கள் மற்றும் சாலைகளிலும் வெள்ளம் புகுந்தது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்யத்தொங்கியது. இதனால் கோபிசெட்டிபாளையம், அயலூர், செம்மாண்டம்பாளையம் மற்றும் நாகர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வழித்தொடிய மழை நீர் கோபிசெட்டிபாளையம் நகர் பகுதியின் மையத்தில் செல்லும் கீரிப்பள்ளம் ஓடைக்கு வந்ததால் கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கீரிப்பள்ளம் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட வண்டிப்பேட்டை, வாஸ்துநகர், சாணார்பதி, நஞ்சகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் புகுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாக்கடைகள் அடைப்பினால் நஞ்சகவுண்பாளையம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கீரிப்பள்ளம் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தடப்பள்ளி வாய்க்காலில் கலந்து பாசன நீருடன் சேர்ந்த மழைநீரால் தடப்பள்ளி பாசன வாய்க்கால் வயல்களில் புகுந்த மழை வெள்ளத்தினால் பாரியூர் வெள்ளாளபாளையம் மற்றும் நஞ்சகவுண்டம்பாளைம் ஆகிய தடப்பள்ளி பாசன பகுதிகளில் 100 ஏக்கருக்கும் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மழை நீர் புகுந்து பாதிக்கபட்டுள்ள நெற் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர். தடப்பள்ளி கிளைவாய்காலான கூகலூர் கிளைவாய்க்காலில் படர்துள்ள ஆகாய தாமரைகளை பொதுப்பணித்துறையினர் அகற்றாததினால் தான் மழை நீர் வாய்கால்களில் வடிந்தோடாமல் தடுக்கப்பட்டு வயல்களில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் கீரிப்பள்ளம் ஓடையில் ஏற்படும் மழை வெள்ளத்தினால் ஒவ்வொரு ஆண்டும் வீடுகள் மற்றும் நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும் மழை வெள்ளத்திலிருந்து நெற் பயிர்களையும் வீடுகளையும் பாதுக்காக்க நகராட்சி நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Views: - 17

0

0