கொரோனாவை கடந்து சாலை பணிகளை துரிதப்படுத்தும் நெடுஞ்சாலைத்துறை…

11 August 2020, 7:30 pm
Quick Share

கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரூ.40.70 மாதிரி சாலைப்பணிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.998 கோடி மதிப்பில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், அதிநவீன சாலைகள், பொழுதுபோக்கு பூங்காங்கள், குளங்களை அழகுப்படுத்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் சாலையை மாதிரி சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டு, மாநகராட்சி சார்பில் ரூ.40.70கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலை பணிகள் ஜுன் 12ம் தேதி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அதற்கான பணிகளை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலை திட்டத்தில், அப்பகுதியில் உள்ள சாலைகள், சீரான அகலமுள்ள சாலைகளாக குறிப்பிடத்தக்க வளைவுகளுடன் தரமாக வடிவமைக்கப்பட்டு, அனைத்து சந்திப்புகளும் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு அகலப்படுத்தப்பட உள்ளது. மேலும், வாகனங்கள் நிறுத்த பிரத்யேக இடங்கள் அமைக்கப்படவுள்ளது. மக்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் சாலையின் இருபுறங்களிலும் பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு இடங்களில் திறந்த வெளியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக உடற்பயிற்சிக் கூடங்கள், சிந்தட்டிக் தரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பொழுது போக்கிற்காக சிந்தட்டிக் தரைதளத்துடன் கூடிய குழந்தைகள் பூங்காவிளையாட்டு உபகரணங்களுடன் அமைக்கப்பட உள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பு அறைகள், நிழற்குடைகள், இலவச தொலைத்தொடர்புகள், பாதுகாப்பு வசதிக்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், சாலையோரங்களில் சிற்றுண்டி கடைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், மழை காலங்களில் மின்சாரம் தடைப்படாமல் கிடைக்க மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் போன்றவைகள்நிலத்திற்கு அடியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள், அனைத்தும் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 20

0

0