காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம் : 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் கைது!!

Author: Udayachandran
27 July 2021, 7:31 pm
Theif Caught -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனியில் போலீசார் பாதுகாப்பில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி 4 நாட்களுக்கு முன்பு தப்பியோடிய நிலையில் இன்று கைது செய்யப்பட்டார்

திண்டுக்கல் மாவட்டம் அடிவாரம் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம்‌ என்பவருக்கும் துர்க்கை வேலு என்பவருக்கும் இடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு பேருந்துநிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையில் தகராறு ஏற்பட்டதில், துர்க்கை வேலுவை ஜீவானந்தம் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து துர்க்கைவேலு கொடுத்த புகாரின்பேரில் பழனி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து ஜீவானந்தத்தை தேடிவந்தனர். இந்நிலையில் ஜீவானந்தத்தை பிடிக்க சென்றபோது போலீசாரை பார்த்ததும் ஓடமுயன்ற ஜீவானந்தத்தை போலீசார் துரத்தியபோது கீழே விழுந்து காலில் பலத்தகாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து ஜீவானந்தத்தை கைது செய்த போலீசார் பழனி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் ஜீவானந்தத்தை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு ஆரோக்கியம் மற்றும் தண்டபாணி‌ என்ற இரண்டுகாவலர்கள்‌ பாதுகாப்பில் இருந்த கைதி ஜீவானந்தம் பாதுகாப்பில் இருந்த போலீசார் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

காலில் முறிவு ஏற்பட்டு நடக்கமுடியாத நிலையில் தவழ்ந்து தவழ்ந்து சென்றதாக பார்த்தவர்கள் கூறுகின்றனர். காலில் முறிவு ஏற்பட்டு நடக்கமுடியாமல் சிகிச்சை பெற்றுவந்த கைதி ஒருவர் போலீசார் கண்ணில் மண்ணைத் தூவி தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நான்கு நாட்களாக ஜீவானந்தம் தலைமறைவாக இருந்த நிலையில் பழனி நகர ஆய்வாளர் பாலமுருகன் தலைமயிலான போலீசார் இன்று கொடைக்கானல் சாலையில் வைத்து கைது செய்தனர்.

Views: - 181

0

0