வங்கியில் போலி நகைகளை கொடுத்து 4 கோடியே 52 லட்சம் ரூபாயை மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது

15 July 2021, 3:56 pm
Quick Share

திருவள்ளூர்: மீஞ்சூரில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் போலி நகைகளை கொடுத்து 4 கோடியே 52 லட்சம் ரூபாயை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்

திருவள்ளூர் மாவட்டம் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைக் கடனுக்காக வழங்கப்பட்ட தங்க நகைகளை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது போலியான நகைகள் அடகு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2020-ம்ஆண்டு வரை வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஆக பணிபுரிந்த மேகநாதன் போலி நகைகளை அசல் நகை என கூறி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மேகநாதனிடம் மேற்கொண்ட விசாரணையில், வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் 4 கோடியே 52 லட்சம் ரூபாய் மோசடி செய்தது உறுதியானது.

இதனையடுத்து வங்கியின் துணை பொது மேலாளர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி அசோகன் தலைமையில் காவல்துறையினர் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் மேகநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொதுமக்களை பயன்படுத்தி நூதன முறையில் கவரிங் நகைகளை கொடுத்து அடகு வைத்து பல ஆண்டுகளாக நகை மதிப்பீட்டாளர் நகை கடன் பெற்று மோசடி செய்தது மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்று தங்கள் அசல் தங்க நகைகளும் போலியாக மாற்றப்படுமோ? என்ற அச்சத்தில் இங்கு நகைகளை அடகு வைத்து கடன் பெற்ற பொது மக்கள் உள்ளனர். வங்கி அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து இது போன்ற மோசடிகளை [உடனுக்குடன் கண்டறிய உரிய நடவடிக்கை எடுக்காததால் மோசடி சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.இந்த மோசடி சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் பொருளாதார குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 74

0

0