மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளில் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி….

Author: Udhayakumar Raman
24 October 2021, 6:31 pm
Quick Share

திருச்சி: மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி கட்டிடங்கள், மின்சாதனங்கள் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சி அரியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கொரோனா குறித்த ஓவியக் கண்காட்சியை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயம் வரவேண்டும் என்பதில்லை.தீபாவளிக்கு பிறகு பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் தீபாவளிக்கு பிறகு வரலாம். மாணவர்கள் காலை எழுவது, உணவருந்துவது, பள்ளிக்கு வருவது போன்ற ஒழுக்க நடவடிக்கைகளை போதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிகள் திறக்கப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 45,000 பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளது .இதில் இந்த ஆண்டு 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.

மாணவர் சேர்க்கை அதிகமுள்ள பகுதிகளில் இடப் பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு இடப் பிரச்சினை எழும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அருகே உள்ள எண்ணிக்கை குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும். நீட் தேர்வு ரத்து குறித்து 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.அதற்கு அவர்களின் கருத்துக்களை அறிந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளிகள் அனைத்தும் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்ததால் போதிய பராமரிப்பின்றி உள்ளது.பள்ளிகளில் உள்ள மின்சார சாதனங்கள், கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன. அது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பொதுப்பணித் துறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Views: - 107

0

0