சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் கோலாகலம்: தேரை வடம் பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்….
Author: kavin kumar30 October 2021, 3:58 pm
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியால் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவதாக வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பாதுகாப்பு விதிகள் காரணமாக திருவிழா நடைபெறவில்லை.இந்நிலையில, இந்த ஆண்டு கடந்த அக்.,22ம் தேதி கொடியேற்றத்துடன் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா துவங்கியது. தினமும் மாலை அம்மன் பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது.
காலை 10.30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் கர கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். கீழ ரதவீதியில் இருந்து தேர் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் இணை இயக்குநர் அன்புமணி, கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோட்டுராஜா, தொழிலதிபர்கள் தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகர், கமலஹாசன், ஈபி பழனியப்பன், ஆறுமுகம், செந்தில்குமார், மந்திரம் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை பட்டர்கள் செல்வம், சண்முகம், குரு ஆகியோர் நடத்தினர். வருகிற நவ.1ம் தேதி திருக்கல்யான வைபம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
0
0