இந்தி தெரியாதவர்களை வெளியேறுங்கள் என்று கூறினால் அது தவறானது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

22 August 2020, 11:08 pm
Quick Share

மதுரை: திமுக நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்பட மாட்டாது என அறிவிப்பு பலகை வைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை தெப்பக்குளத்தில் மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளைஞர் அணியினருக்கான உறுப்பினர் சேர்க்கை படிவத்தினை மாநகர், வட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜீவும் மாநகர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளருமான சோலை. ராஜா ஆகியோர் வழங்கினார்கள் இக்கூட்டத்திற்கு மதுரை மாநகர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சோலை. ராஜா தலைமை ஏற்றார். தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்,

இளைஞர்கள் தான் இந்த நாட்டை வழிநடத்தக்கூடியவர்கள். இளைஞர்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம். தேர்தல் நேரத்தில் எப்போதும் அதிமுக எல்லா கட்சிகளுக்கும் முன் மாதிரியாகவே செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா காலத்திலிருந்தே ஆட்சியின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி வருகின்றோம். அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் ஆட்சியின் அவலங்களை தேர்தல் நேரத்தில் மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்.

தேர்தல் பணியாற்றுவதில் அதிமுக எப்பொழுதுமே முன்னணியில் நின்று கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அரசு நினைக்கவில்லை. திடீரென்று கலந்து கொள்ள முடியாது. பரிசோதனை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியரை அணுகினால் மக்கள் உறுப்பினர்கள் நிச்சயமாக கலந்து கொள்ளலாம். யாரையும் அதிமுக அரசு தவிர்ப்பது கிடையாது. அதிமுக பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. சட்டமன்றத்திலேயே நேருக்கு நேர் எதிர் திமுகவை கொள்கிறோம். ஆனால் அவர்கள் கேள்வி கேட்க தயங்குவார்கள்.

கொரானா தடுப்புப் பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரிடம் கூறலாம். கொரானா பரிசோதனை செய்துவிட்டு முதல்வரை நேரடியாக சந்தித்து பேசலாம் என முதல்வர் ஏற்கனவே தெரிவித்து விட்டார். இந்தி தெரியாதவர்களை வெளியேறுங்கள் என்று கூறினால் அது தவறானது. அந்தச் சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் முதலமைச்சர் கண்டிப்பான முறையில் நடவடிக்கை எடுப்பார். திமுக நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்பட மாட்டாது என அறிவிப்பு பலகை வைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா. பேச்சுக்காக எதையும் திமுக கூறக்கூடாது. ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எதையாவது பேசக்கூடாது.

எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் சாதனைகளை முதல்வரின் நான்காண்டு சாதனைகளை மக்களிடம் வீடு வீடாகச் சென்று எடுத்துச்சொல்ல இருக்கிறோம். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பேணிக்காகக்கப்படுகிறது. திமுக காலத்தில் போல் தமிழகத்தில் ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்து மீட்டர் வட்டி கந்து வட்டி, ரிமோட் வெடிகுண்டு போன்ற எந்த பிரச்சனையும் தற்போது இல்லை.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை. தேர்தல் நெருங்குவதால் சிறுபான்மை இன மக்களை ஸ்டாலின் ஏமாற்றிக் கொண்டு உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாவற்றிலும் நழுவி செல்லக்கூடியவர்கள். அதிமுகவை பொறுத்தவரை எம்மதமும் சம்மதம். எல்லா மதமும் எங்களுக்கு ஒன்றுதான். சாதி மதம் கிடையாது. தேர்தல் நேரத்தில் அதிமுக வேஷம் போட்டதில்லை என கூறினார்.