கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

6 February 2021, 4:06 pm
Quick Share

திருச்சி: மணப்பாறை அருகே புனித வனத்து அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் காணுகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தீராம்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு புனித அந்தோணியார், புனித செபஸ்தியார் ஆலய திடலில் தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 600-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் காணுகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியினை வருவாய் வட்டாட்சியர் லஜபதிராஜ், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். கோயில் காளை ஊர் முக்கியஸ்தர்களால் தாரைத்தப்பட்டைகள் முழங்க குத்தாட்டத்துடன் வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டது.

முதலில் கோவில் காளைகள் புனித நீர் தெளிக்கப்பட்டு வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்ட நிலையில், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டு வருகிறது. வாடிவாசல் வழியே திமிறி சீறிபாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது.

இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு எல்.இ.டி. டிவி, தங்க காசு, வெள்ளிக்காடு, பட்டுபுடவை, சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மணப்பாறை பகுதியில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு என்பதால் சுற்றுவட்டார கிராம மக்கள் ஜல்லிக்கட்டு போட்டியினை காண ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

Views: - 0

0

0