வேளாண் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்த கனகசபாபதி

22 September 2020, 2:58 pm
Quick Share

கோவை: விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் கனகசபாபதி தெரிவித்துள்ளார்.

கோவை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி செய்தியாளர்களை சந்தித்து மத்திய அரசின் வேளாண் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- விவசாயத்துறையில் இருந்த பெரிய கட்டுப்பாடுகளை பிரதமர் தளர்த்தி இருக்கிறார். வேளாண் விளைபொருள் வர்த்தக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகள் ஒப்பந்தம் அதிகாரம் மற்றும் பாதுகாப்புச் சட்டம் என இரண்டு முக்கிய மசோதாக்கள் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகள் நாட்டின் எந்த பகுதிக்கும் கொண்டு சென்று தனது விளை பொருட்களை ஒப்பந்தம் செய்து விற்க முடியும்.

விவசாயிகள் நேரடியாக நிறுவனங்களுக்கும், வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தனது விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் சூழலை மத்திய அரசை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விளைச்சல் வரை முழு உரிமையும் விவசாயிகளிடம் மட்டுமே இருக்கும். அதன் மீது பயிர்க்கடன் பெறவும், காப்பீடு செய்யவும் முடியும். விவசாயிகள் நேரடியாக தங்களது லாபத்தை நிர்ணயித்துக் கொள்ள முடியும். இந்த சட்டங்களின் மூலம் மாநில உரிமைகள் நீர்த்துப்போகும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.

விவசாயிக்கு இன்னொரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலையை பாதிக்காது. விவசாயிகளின் நிலம் தொடர்பான எந்த தகவல்களும், வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களில் இடம் பெறாது. விவசாயிகள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் எந்த சூழலிலும் ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பிட்ட பயிர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஒப்பந்தங்கள் விவசாயிகளுடன் போடப்படும்.

அதிக விலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு தங்களது விளை பொருட்களை விற்க விவசாயிகளுக்கு வாய்ப்பு அமைந்துள்ளது. கிசான் ரயில் விவசாயிகளுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு விவசாயப் பொருட்களை எடுத்துச் சென்று நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும். சுயசார்பு வேளாண்மைக்கு இந்த சட்டங்கள் துணைபுரிகிறது.

இந்த ஆண்டில் 3.9 கோடி டன் விவசாய விளைபொருட்கள் மத்திய அரசால் வாங்கப்பட்டுள்ளன. உறை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்தச் சட்டங்கள் மூலம் இடைத்தரகர்கள் பெருமளவு ஒழிக்கப்படுவார்கள். இந்தச் சட்டங்கள் மூலம் விவசாயத்துறை பெருமளவு வளர்ச்சி பெறும் என்றார்.

Views: - 3

0

0