கல்குவாரி லாரி மோதி சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழப்பு…

25 August 2020, 10:34 pm
Quick Share

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கல்குவாரி லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

உத்திரமேரூர் அடுத்த மதூர், பழவேறி, அரும்புலியூர், நெற்குன்றம், பினாயூர், பொற்பந்தல் மற்றும் சுற்றியுள்ள மலை பகுதிகளில் பல்வேறு கல்குவாரிகள், கிரஷர்கள் இயங்குகின்றன. இங்கிருந்து நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் திருமுக்கூடல், பழையசீவரம் சாலை வழியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. கல்குவாரிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால், சாலைகள் சேதமாவதுடன், கிராம மக்கள்  சாலையை கடக்கும்போது, விபத்தில் சிக்குகின்றனர்.

இதனால், படுகாயம் அடைவதோடு, உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றன. இந்நிலையில் சத்துணவு துறையில் வேலை பார்த்து வரும் திருமுக்கூடல் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு சாலவாக்கம் காவல் நிலையத்திற்க்கு விசாரணைக்காக சென்றுவிட்டு சாலவாக்கத்தில் இருந்து பழைய சீவரம் வழியாக  திருமுக்கூடல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில், மதூர்  கிராமத்தில் இயங்கும் கல்குவாரியில் இருந்து கனரக லாரி ஒன்று திருமுக்கூடல் நோக்கி அதிவேகமாக சென்றது.

அப்போது எதிரே வந்த பாண்டியன் இருசக்கர வாகனத்தின் மீது லாரி உரசியதில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார். அவர் மீது கனரக லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே மகேஸ்வரி பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்த சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கல்குவாரி லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், திருமுக்கூடல் –  பழையசீவரம் சாலையில் கிராமத்துக்கு கல்குவாரி லாரிகள் வர கூடாது என 50க்கும் அதிகமான லாரிகளை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் சடலத்தை எடுக்க விடாமல் கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மகேஸ்வரியின் சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சடலத்தை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.

Views: - 0

0

0