நாளை அனைத்து கோவில்களும் திறப்பு: தீவிரமடையும் கோவில்களை சுத்தம் செய்யும் பணி

31 August 2020, 3:19 pm
Quick Share

காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கோவில்களும் திறக்க உள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

பொது முடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக கோவில்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் மூடப்பட்டிருந்தது. இருந்தாலும் வழக்கம்போல பூஜைகள் நடந்தன. இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் மிகவும் பிரபலமான காமாட்சி அம்மன் திருக்கோவில், ஏகாம்பரநாதர் திருக்கோவில், குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், அத்திவரதருக்கு புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோவில்கள் அனைத்தும் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

நாளை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். காலையில் ஏழு முப்பது மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் கோவில் நிர்வாகத்தினர் கூறினர். இதுகுறித்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறியதாவது அரசு உத்தரவின்படி கோவில்கள் நாளை முதல் திறக்கப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கை கழுவும் திரவம் வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதேபோல தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்களின் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்படுவார்கள். பக்தர்கள் அனைவரும் பொது தரிசன வழியிலேயே சென்று பொது தரிசனம் வழியிலேயே திரும்பி செல்ல வேண்டும் முக்கிய பிரமுகர்களுக்கான வழியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. அதேபோல காமாட்சி அம்மன் கோவிலில் காயத்ரி மண்டபத்தில் இருந்து அம்மனை தரிசிக்க அனுமதி இல்லை. கோவில்களில் சிவாச்சாரியார்களோ அல்லது பட்டாச்சாரியார்களோ விபூதி, குங்குமம்,தீர்த்தம், ஆகியன எதையும் வழங்க மாட்டார்கள்.

பக்தர்கள் அவர்களாகவே தீபாராதனைத் தட்டில் உள்ள விபூதி, குங்குமம் எடுத்துக்கொள்ள வேண்டும் .அரசு வழிகாட்டுதலின்படி கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் . முக்கியமாக சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் பக்தர்கள் வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

Views: - 7

0

0