சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளியில் செய்த வில் அம்பு வைத்து பூஜை

Author: Udhayakumar Raman
2 September 2021, 4:58 pm
Quick Share

திருப்பூர்: காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உள்ள பூஜை பொருள் மாற்றம் செய்யப்பட்டு, வெள்ளியில் செய்த வில் அம்பு வைத்து பூஜை செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் சிவவாக்கியசித்தரால் பாடல் பெற்ற தலம் ஆகும். சிவன்மலை கோவிலின் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் முக்கிய நிகழ்வுகளை முன்னதாகவே உணர்த்தி வருவதால் காரணமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் ஒரு பொருளை உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். அப்பொருள் பெட்டியில் வைத்து பூஜை செய்வது தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. உத்தரவு பெற்ற பக்தர் கோவிலுக்கு வந்து கூறும் தகவலை, அர்ச்சகர்கள் சுவாமி சன்னதியில், வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ வந்தால் மட்டுமே, அந்த பொருள் கண்ணாடி பேழையில் வைத்து, பூஜை செய்யப்படும்.

இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு,நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, தெய்வஜாதகம், குங்குமம் என வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருளின் காரணமாக நாட்டில் அந்த பொருள் சமபந்தமாக பெரும்பாலும் ஆக்கம், அழிவு போன்ற செயல்கள் நடைபெறும் என்பது ஐதீகம். தங்கம் வைத்து பூஜை செய்தபோது, தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. மண் வைத்து பூஜை செய்த போது நிலங்களின் மதிப்பு அதிகமானது. தண்ணீர் வைத்து பூஜை செய்யப்பட்ட போது சுனாமி ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

இன்றுவரை உத்தரவு பெட்டியில் இருந்த பச்சை வேட்டி, துண்டு, வெள்ளை சட்டை, மதிப்பு இழந்த 500 ரூபாய் 2 மற்றும் 5,2,1 ரூபாய் நாணயம் என மொத்தம் ரூ.1008, இரண்டு ராசி கட்டங்கள், தேங்காய், எலுமிச்சை, வெற்றிலை, பூ, பாக்கு ஆகியவற்றை எடுத்துவிட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒய்யம்மார் பட்டியை சேர்ந்த ரேணுகாதேவிக்கு உத்தரவான வெள்ளியினாலான வில் அம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பொருட்களுக்கான காரணம் வரும் நாட்களில் தெரியவரும்.

Views: - 451

0

0