காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகா தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

27 February 2021, 9:12 pm
Quick Share

கோவை: காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகா தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் முழங்க திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடையில் 1000ஆண்டுகள் பழமைவாய்ந்த அரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. கொங்கு மண்டலத்தில் பிரசித்திபெற்ற வைணவத்திருத்தளமான இங்கு ஆண்டு தோறும் மாசி மகா தேர் திருவிழாவானது வெகுவிமர்சையாக நடைபெறும். இந்தாண்டுக்கான தேர் திருவிழா நிகழ்ச்சி கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையடுத்து அரங்கநாத பெருமாள் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பெருமாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். இதனைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைப்பெற்றது. தேரோட்டத்தினை முன்னிட்டு நேற்று அரங்கநாத பெருமாளுக்கும் ஸ்ரீதேவி பூதேவிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்ற நிலையில்,

இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் திருத்தேரோட்ட நிகழ்வானது நடைபெற்றது. பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷங்கள் முழங்க திருத்தேரினை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். கோவில் முன்பு இருந்து துவங்கி திருத்தேரானது நான்கு மாடி வீதிகளின் வழியே வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கநாதரை வழிபட்டனர்.

Views: - 1

0

0