வினோத நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்: சிறுவனை காப்பாற்ற அரசு முன்வர கண்ணீர்மல்க பெற்றோர்கள் கோரிக்கை

Author: kavin kumar
14 August 2021, 2:31 pm
Quick Share

கரூர்: ஆஸ்டியோ ஜெனிசிஸ் இன்பர்பேக்டோ என்கின்ற எலும்பு முறிந்து அடிக்கடி சிதைவு ஏற்படும் குழந்தையை காப்பாற்ற அரசு முன்வரவேண்டுமென்றும், இதை தங்களால் பார்க்க முடியவில்லை என்றும் ஆகையால் குழந்தையை கருணை கொலையாவது செய்யுங்கள் என கரூர் அருகே கண்ணீர்மல்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் அசோக் நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளியில், சதுரங்க விளையாட்டு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு கடந்த 2004 ம் ஆண்டு திருமணமாகிய நிலையில், இவர்களுக்கு 2010 ஆண்டு சஞ்சய் என்கின்ற மகன் பிறந்துள்ளான். பிறந்து 7 வது நாள் முதல் அக்குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் 2 கைகளிலும் எலும்பு உடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தங்களுக்கு தெரிந்த தனியார், அரசு மருத்துவமனைகளுக்கு சிறுவனை தூக்கிச் சென்றுள்ளனர். 8 மாதம் ஆன நிலையில் தான் அச்சிறுவனுக்கு எலும்பு முறிவு நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

தற்போது அவனுக்கு (வயது 11). கரூர் ராயனூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது மகனுக்கு பிறந்தது முதலே எலும்பு சிதைவு (ஆஸ்டியோ ஜெனிசிஸ் இன்பர்பேக்டோ) என்ற வினோதமான நோய் ஒன்று உள்ளது. எலும்பு சிதைவு நோய் உள்ளதால் இதுவரை சுமார் 57 முறை கை – கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சுமார் 16 லட்சங்கள் வரை கடன் வாங்கி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை வேலூரில் உள்ள சிஎன்சி மருத்துவமனையில் 30,000 ரூபாய் செலவில் ஊசி ஒன்று போட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த ஊசியானது வாழ்நாள் முழுக்க போட வேண்டிய சூழ்நிலை உள்ளதாக சஞ்சயின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொரோனா நோய் தாக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவக்குமார் வேலை இல்லாமல் வீட்டில் இருப்பதால், போதிய பணம் இல்லாத சூழ்நிலையில் தனது மகனுக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்க முடியாத நிலையில் உள்ளார். ஊசி செலுத்தப்படாததால் சிறுவன் நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். இச்சூழ்நிலையில் உள்ள தனது மகன் அன்றாட இயற்கை உபாதைகளுக்கு கூட தாய் – தந்தையை நம்பி இருக்கின்ற சூழ்நிலையே இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் பெற்றோர். நடுத்தரக் குடும்பமான தங்களால் மகனின் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் தமிழக தமிழக அரசு தங்கள் மகன் சஞ்சய் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

11 வயது சிறுவனை தன் தாய் இன்னும் குழந்தை போல பாதுகாத்து வளர்த்து வருகிறார். அவன் தானாக நடந்தாலே எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மெத்தையில் படுக்க வைத்து, உட்கார வைத்து பராமரித்து வருகின்றனர். கரூர் நகரில் சிறுவன் சிறு வயதாக இருக்கும் போது கை எலும்பு முறிந்ததற்கு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது எலும்பை மாற்றி வைத்து அறுவை சிகிச்சை செய்ததால் கைகளை மடக்க முடியாத சூழல் ஏற்பட்டு, அவற்றை சரி செய்ய மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கைகளை சரி செய்துள்ளனர். ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டதால் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை பிறந்து இதே பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில்,

அடுத்து பிறந்த மகனும் இந்த நோயால் பாதிக்கப்பட்டதால் பெற்றோர் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். இது போன்று கரூர் மாவட்டத்திலும், தமிழக அளவிலும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிப்புள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் இது போன்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி சிகிச்சை மையம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் பெற்றோர்கள் தினம் தினம் இந்த சிறுவனை காணும் போது சிறுவன் அனுபவிக்கும் சித்ரவதைகளை, காண முடியாமல் அரசு உதவ வேண்டுமென்றும் இல்லையென்றால் எங்களால் இந்த காட்சியை காண முடியவில்லை என்பதால் சிறுவனை கருணை கொலையாவது செய்யுமாறும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 184

0

0