கரூரில் இன்று ஒரே நாளில் 19 நபர்களுக்கு கொரோனா…
2 August 2020, 3:34 pmகரூர்: கரூரில் பிறந்த குழந்தை மற்றும் 6 மாத குழந்தை உட்பட இன்று ஒரே நாளில் 19 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்று மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல, காந்திகிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரின் 6 மாத குழந்தைக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அரவக்குறிச்சியில் காவலர் குடியிருப்பில் உள்ள 55 வயது நபர் உட்பட மொத்தம் 19 நபர்களுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டது.
அடுத்தடுத்து தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கரூர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 552 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9 நபர்கள் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், தற்போது, 138 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 291 நபர்கள் சிகிச்சையில் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.