ஆன்லைன் வகுப்பிற்கு 5 கிலோ மீட்டர் பயணம் செய்யும் குழந்தைகள்

2 September 2020, 5:17 pm
Quick Share

நீலகிரி: ஆன்லைன் வகுப்பிற்கு நெட்வொர்க் தேடி தினந்தோறும் 5 கிலோமீட்டர் தொலைவு பயணப்பதால் பர்லியாறு பகுதி குழந்தைகள் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான கோழிக்கரை,குரும்பாடி, பர்லியாறு, புதுக்காடு போன்ற அடர்ந்த வனப்பகுதி மத்தியில் பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடியினரல்லாத மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் குன்னூர் அல்லது மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வந்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக இவர்களின் கல்வி பாதிப்படைந்துள்ளது. நகர் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தினந்தோறும் ஆன்ராய்டு போன், லேப்டாப் உதவியுடன் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்வி தரம் பாதிப்படைய கூடாது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கு நெட்வொர்க் இல்லாமல் உள்ளது‌. இது மட்டுமின்றி சாதாரண செல்போன் கூட இல்லாத நிலையில் ஆன்லைன் என்றால் என்னவென்று தெரியாது என்று பழங்குடியின பெற்றோர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பர்லியாறு பகுதியில் நெட்வொர்க் இல்லாததால் தினந்தோறும் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு சென்று சாலையோரத்தில் அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து வசதிகள் இல்லாததால் வரக்கூடிய வாகனங்களில் உதவி கேட்டு குழந்தைகள் சென்று வருகின்றனர். இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். தங்கள் குழந்தைகளின் கல்வியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து இவர்களுக்கு கல்வி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பர்லியாறு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Views: - 7

0

0