மகளிர் குழு கடன் பிரச்சினையில் கூலி தொழிலாளி கொலை: குற்றவாளி கைது

Author: Udhayakumar Raman
31 July 2021, 5:57 pm
Quick Share

மயிலாடுதுறை: சீர்காழி அருகே மகளிர் குழு கடன் பிரச்சினையில் கூலி தொழிலாளி கொலை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ஜான். விவசாய கூலி தொழிலாளி. இவர் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் கிறிஸ்துவ தெருவில் தனது மாமனார் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறார்.இதே எருக்கூர் கிறிஸ்துவ தெருவைச் சேர்ந்த பெரிய ஆள் என்கிற அந்தோணிசாமி மகன் ஆரோக்கியதாஸ் என்பவரின் மனைவி பிலோமினாமேரி. ஒரு மகளிர் குழுவில் தலைவியாக இருந்து வருகிறார். இந்த குழுவில் ஜான் மனைவி ஜோஸ்பின் மேரியும் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்தக் குழு மூலம் பெற்ற கடன் தொகையை ஜோஸ்பின்மேரிக்கு முழுமையாக கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் நேற்று இரவு கிறிஸ்தவ தெருவில் வீட்டு முன்பு பெண்களுக்குள் ஒருவரை ஒருவர் வாய் தகராறு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆரோக்கியதாஸ் தனது மனைவிக்கு ஆதரவாக ஜான் மனைவி ஜோஸ்பின் மேரியை திட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த ஜான் ஆரோக்கியதாசை தட்டிக் கேட்டார். இதில் ஜானுக்கும் ஆரோக்கியதாசுக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர்.இதில் ஆரோக்கியதாஸ் ஜானின் கழுத்தைப் பிடித்து  நெரித்து கீழே தள்ளியதில் ஜான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் கொலை வழக்கு பதிவு செய்து ஆரோக்கியதாசை கைது செய்தனர். கொலையான ஜானுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

Views: - 160

0

0