கவுண்டச்சி புதூர் ஊராட்சி தலைவி கணவருடன் தீக்குளிக்க முயற்சி

14 August 2020, 10:58 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் அடுத்த கவுண்டச்சி புதூர் பெண் தலைவி தனது கணவருடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சி புதூர் ஊராட்சியின் பெண் தலைவராக இருப்பவர் செல்வி. இவரது கணவர் ரமேஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன் அறக்கட்டளை ஒன்றின் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் 2 லட்ச ரூபாய் கடனாகப் பெற்று கடனுக்கு ஈடாக இரண்டு காசோலைகளை வழங்கி இருந்தார். இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தபின் கோபாலகிருஷ்ணன் தனது பணத்தை பல முறை திருப்பி கேட்டும் அதற்கு ரமேஷ் முறையான பதில் கூறாததால் தாராபுரம் நீதிமன்றத்தில் ரமேஷ் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜக ஆதரவு மகளிர் அணியினர் உடன் கைகளில் கொடியை ஏந்தியவாறு செக் மோசடி வழக்கை தொடுத்த கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் முன்வந்த ஊராட்சித் தலைவி செல்வியும், அவரது கணவர் ரமேஷ் மற்றும் ஆதரவாளர்கள் தங்களை உயர் ஜாதி வர்க்கத்தினர் கொடுமை படுத்துவதாகவும், ஊராட்சி ஒன்றிய கூட்டத்தை நடத்தவிடாமல் முடக்கி வைப்பதாகவும் புகார் கூறியதுடன் கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்தின் 3 வது வார்டு அதிமுக உறுப்பினர் குப்புசாமி என்பவர் மீது செல்வி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெறக்கூறி அறக்கட்டளை பள்ளி நிர்வாகி கோபாலகிருஷ்ணன் தங்களை மிரட்டுவதாகவும்,

தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவியான தன்னால் ஊராட்சி மன்றக் கூட்டத்தை நடத்த முடியவில்லை என்றும், தங்களுக்கு சுதந்திர தினமான இன்று நள்ளிரவு முதல் விடுதலை வேண்டும் எனக்கூறி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டதாக கணவன் மனைவி இருவரும் கூறினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஊராட்சி தலைவி செல்வி அவரது கணவர் ரமேஷ் இருவரையும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன் அறக்கட்டளை பள்ளி நிர்வாகி கோபாலகிருஷ்ணனை அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். ஊராட்சித் தலைவியும் அவரது கணவரும் பாஜகவினர் உடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊராட்சித் தலைவி செல்வியின் கணவர் ரமேஷ் ஊராட்சி மன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து தலையிட்டு வார்டு கவுன்சிலர்களின் திட்டப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஊராட்சித் தலைவரின் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பரவை விட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், ஏற்கனவே ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் அனைவரும் ஊராட்சித் தலைவி மற்றும் அவரது கணவரின் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 0 View

0

0