100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ பிரிவு தொடக்கம்…
7 August 2020, 9:34 pmஅரியலூர்; கொரோனா தொற்றை குணப்படுத்த 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ பிரிவை அரசு கொறடா தொடங்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு அரசு மருத்துவகல்லூரி மருத்துவனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் சிலர் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் குரும்பஞ்சாவடி பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் 100 படுக்கைகள் கொண்ட சித்தமருத்துவ மையம் அமைக்கப்பட்டது. இம்மையத்தினை அரசு கொறடா தாமரை.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
சித்த மருத்துவர்கள், யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 10 பேர் சுழற்சி முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளனர். மேலும் கபசுர குடிநீர், உப்புகலந்த நீரில் தொண்டை சுத்தம் செய்தல், இஞ்சிடீ, எட்டு வடிவ நடைப்பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி, இயற்கை உணவுகள், தானிய பயிர்களில் உணவுகள் உள்ளிட்டவை மூலம் நோயை குணப்படுத்தும் சிகிச்சைகள் மற்றும் உணவுகளை மருத்துவர்கள் வழங்குகின்றனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சித்தமருத்துவத்தை விரும்புவர்களுக்கும், ஆரம்ப கட்ட நோய் தாக்குதளில் உள்ளவர்களுக்கும் இம்மையத்தில் சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.