முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் வெட்டிக்கொலை…! காஞ்சிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

12 April 2021, 9:52 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள காரை கிராமத்தைச் சேர்ந்தவர் அழகரசன்(42). வழக்கறிஞராக உள்ளார். இவர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இடத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வெட்டப்பட்ட இடத்திலேயே அழகரசன் உயிரிழந்தார். இந்தக் கொலை ஸ்கிராப் எடுப்பது தொடர்பான தொழில் போட்டி காரணமாகவும், அழகரசன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவும் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேக்கின்றனர்.

கொலையாளிகள் குறித்து போலீஸாருக்கு அடையாளம் தெரிந்துள்ளது. கொலை செய்யப்பட்டவரும், கொலை செய்தவர்களும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காரை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். இந்தக் கொலைச் சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இவருக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில்ஈடுபட்டனர்.

இதனால் காஞ்சிபுரம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட அழகரசன் ஏற்கனவே ஆண்டி சிறுவள்ளூர் பகுதியில் யுவராஜ் என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளவர் என்றும் இவர் மீது அடிதடி வழக்குகள் உள்ளது என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. வழக்கறிஞர் அழகரசன் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை அருகே சாலை மறியல் செய்ததால் பரபரப்பு.

Views: - 39

0

0