ஹாரிஸ் ஜெயராஜின் சினிமா தியேட்டருக்கு விதித்த ரூ.7 லட்சம் மின் கட்டணம் ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…

11 September 2020, 2:26 pm
Quick Share

மதுரை: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் சினிமா தியேட்டருக்கு விதித்த ரூ.7 லட்சம் மின் கட்டணம் ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சினிமா இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்:
சரவணபவ எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளேன். இந்த நிறுவனம் சார்பில் தஞ்சாவூரில் உள்ள ஜி.வி.ஸ்டூடியோ சினிமா தியேட்டர் வளாகத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். இந்த கட்டிடத்துற்கு உயர் அழுத்த மின் இணைப்பு பெறப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தியேட்டர்களையும் மூட உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு தற்போது வரை நீட்டிக்கப்பட்டது.

இதனால் தியேட்டர்கள் பல மாதங்களாக செயல்படாமல் கிடக்கின்றன. ஆனால் மார்ச் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை ஒவ்வொரு மாதத்துக்கும் பல்வேறு வகையில் எங்கள் தியேட்டருக்கு அதிகளவு மின் கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது, கடந்த மார்ச் மாதம் ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 641, ஏப்ரல் மாதம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 302, மே மாதம் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 74, ஜூன் மாதம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 650, ஜூலை மாதம் ரூ.1 லட்சத்து 50 என மொத்தம் ரூ.7 லட்சத்து 2 ஆயிரத்து 667-ஐ மின் கட்டணமாக செலுத்தும்படி மின்வாரியம் உத்தரவிட்டது. இதில் ஜூலை மாதத்துக்கான தொகை மட்டும் செலுத்தப்படவில்லை.

மற்ற அனைத்தும் செலுத்தியுள்ளோம். பயன்படுத்தாத மின்சாரத்துக்கு ஒவ்வொரு மாதமும் கட்டணம் விதிக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில் தியேட்டர்களிடம் மின் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளன. அதை பின்பற்றாமலும், மின்வாரிய விதிகளுக்கு எதிராகவும் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது மின்வாரிய விதிகளுக்கு எதிரானது. எனவே எங்கள் தியேட்டருக்கு விதித்த மின் கட்டணத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “ஏற்கனவே தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே பூட்டியே கிடக்கும் தியேட்டர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாயை மின் கட்டணமாக விதித்ததை ஏற்க இயலாது” என்று கூறப்பட்டது. விசாரணை முடிவில், “மனுதாரர் தியேட்டர் வளாகத்துக்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை வரை விதிக்கப்பட்ட மின்கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் செலுத்திய தொகையை இனிவரும் காலங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான கட்டண தொகையாக எடுத்துக்கொள்ளலாம்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Views: - 0

0

0