தொழில் போட்டி காரணமாக முதியவர் கடப்பாரையால் அடித்து கொலை

17 July 2021, 2:55 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தொழிற்போட்டி காரணமாக முதியவர் கடப்பாரையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பரளச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வடக்கு நத்தத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (65). இவர் அதே ஊரில் மைக் செட் மற்றும் பாத்திரங்கள் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த வள்ளிமுத்து என்பவரும் கார் மற்றும் பாத்திரங்கள் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இருவருக்கும் தொழில் போட்டி காரணமாக அவ்வப்போது ஏற்பட்ட பிரச்சணையால் முன்பகை இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பாலசுப்பிரமணியன் திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தில் நிச்சயதார்த்தத்திற்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய நிலையில், வீட்டிற்கு முன்பாக உள்ள தள்ளுவண்டியில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார்.

பலநாள் பகையுடன் இருந்து வந்த வள்ளிமுத்து பாலசுப்பிரமணியன் அயர்ந்து உறங்கிகொண்டிருந்த நேரம் பார்த்து கடப்பாரையால் கொடுரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. பாலசுப்பிரமணியனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலசுப்பிரமணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பாலசுப்பிரமணியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் தொடர்பாக வள்ளிமுத்துவை கைது செய்த பரளச்சி போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 137

0

0