அரசு மதுபான கடையில் நிருபர் எனக் கூறி மிரட்டி பணம் கேட்ட நபர் கைது

9 September 2020, 7:36 pm
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அரசு மதுபான கடையில் நிருபர் எனக் கூறி மிரட்டி பணம் கேட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நான்காவது தூண் என எல்லோராலும் மதிக்கப்படும் பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்களுக்கு போலி நிருபர்களால் பல விதத்தில் தொல்லைகள், எரிச்சல்கள் ஏற்பட்டு வருகிறது. சமூகத்தில் செய்தியாளர் என்றாலே நேர்மையானவர்கள் என்றும் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்துக்கும், அரசின் திட்டங்களை மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியை செய்பவர்கள் என்ற அடையாளம் உண்டு.சமீபகாலமாக இந்தத் துறையில் போலி நிருபர்கள் உள்ளே நுழைந்து பணத்துக்காக எதை வேணாலும் செய்யலாம் என்ற நிலையில் வளர்ந்து வருகிறார்கள்.

இவர்கள் சினிமாவில் வருவது போல் நானும் ரவுடிதான் என்ற நிலையில் எங்கேயாவது எப்படியாவது யாரிடமாவது நிருபர் என்ற அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு அதை வைத்து மணல் மாபியாக்களிடமும், அரசு மதுபான கடை , பார்கள், அரசாங்க ஒப்பந்ததாரர், லஞ்சம் பெறும் அரசு ஊழியர்கள், பாலியல் சீண்டலில் மாட்டும் கணவான்களிடம் மிரட்டி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர். சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் வழியை கற்றுக்கொண்ட இவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு மேற்குறிப்பிட்ட பல பகுதிகளில் சென்று நேர்மையான அதிகாரிகளை கூட மிரட்டி பணம் மற்றும் மதுபானம் ,போதைப் பொருட்கள் பெற்று இந்த துறையின் மீது களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் அவர்கள் கடந்த வருடம் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேந்திரன் அவர்களிடம் போலி நிருபர்களை கண்டறியும் முறைகள் குறித்து மனு ஒன்றை வழங்கினார். அந்தந்த காவல் துறை மூலமாக உண்மையான நிருபர்களை அடையாளம் கண்டு காவல்துறை மூலம் ஹாலோகிராம் முத்திரையிட்ட அடையாள அட்டையை வழங்கினால் போலி நிருபர்களை முற்றிலுமாக ஒழிக்கலாம் என்று கூறினார். டிஜிபி ராஜேந்திரன் கண்டிப்பாக நடைமுறை படுத்துவோம் என உறுதி அளித்த நிலையில் அவர் ஓய்வு பெற்றார்.

செங்கல்பட்டு நகரில் வைகை தெரு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைக்கு நேற்று ஒரு நபர் சென்று நீங்கள் போலி மதுபானம் விற்ப்பதாக கேள்விப்பட்டோம். அந்த செய்தியை வெளியிடாமல் இருக்க பணம் கொடுங்கள் என மிரட்டியுள்ளார் . பணம் கேட்டு மிரட்டிய நபர் மீது சந்தேகம் அடைந்த அரசு மதுபான கடையின் மேற்பார்வையாளர் நகர காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் பெயர் முரளி என்றும் அரசியல் மலர் புத்தகத்தின் ரிப்போர்ட்டர் எனவும் கூறினார்.

முரளியை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் போலி அடையாள அட்டையை வைத்து மதுபான ஊழியர்களை மிரட்டியது தெரியவந்தது. அதன்பேரில் முரளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 0

0

0