பண தகராறில் வாலிபர் கொலை: ஒருவர் கைது : 3 பேர் தலைமறைவு

1 March 2021, 11:23 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு அருகே பண தகராறில் வாலிபரை கொலை செய்து வாய்க்காலில் வீசி சென்ற சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு வெண்டிபாளையம் நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் மௌலி .இவர் காங்கயத்தில் உள்ள உள்ள தனியார் பனியன் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி வீட்டிற்கு வந்து விட்டதாக தனது தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். வேலையை முடித்து விட்டு மாலையில் வீட்டிற்கு வந்த தந்தை பொன்னுசாமி, வீட்டில் இருப்பதாக கூறிய மகனை காணாமல் தேடியுள்ளார். 4 நாட்கள் ஆகியும் மகன் வீடு திரும்பாததால் தந்தை பொன்னுசாமி கடந்த 24ம் தேதி மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்து மௌலியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை வெண்டிபாளையம் காலிங்கராயன் வாய்க்காலில் பிரேதம் அழுகிய நிலையில் கிடப்பதாக மொடக்குறிச்சி போலீசாருக்கு வந்த தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் தீபா, தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் காணாமல்போன மௌலி என்பது தெரியவந்தது.மௌலியின் உடலில் காயங்கள் இருந்ததால் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் ஈரோட்டை சேர்ந்த சரவணன் என்பவர் லக்காபுரம் அரசு டாஸ்மாக் கடையில் பார் கான்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார்.

மௌலி பாரில் அடிக்கடி வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும், சம்பவத்தன்று பாரில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், மெளலியிடம் பணம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் சரவணன், மூன்று பேருடன் சேர்ந்து மௌலி அடித்து உதைத்து கொலை செய்து காலிங்கராயன் வாய்க்காலில் வீசிச் சென்றுள்ளனர்.இதனையடுத்து மொடக்குறிச்சி போலீசார் சரவணனை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்புடைய தலைமறைவாக உள்ள குணசேகரன், சிவக்குமார், பிரதாப் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 9

0

0