வன்கொடுமை வழக்கினை முறையாக விசாரணை செய்யாத டிஎஸ்பி மீது வழக்கு

4 February 2021, 4:51 pm
Quick Share

சமயபுரம் கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள உத்தமர்சீலி மாதாகோயில் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் பாலசந்திரன் (41). பட்டியல் இன வகுப்பினைச் சேர்ந்த இவர், அவருக்கு சொந்தமான இடத்தில் 17.11.2019 ம் ஆண்டு கழிவறை கட்ட பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முத்திரையர் இனத்தினைச் சேர்ந்த கலைச்செல்வன் உள்ளிட்ட 20 நபர்கள் பாலசந்திரனை தப்படித்தும், பிணம் எரிக்கும் வேலையினை செய்தால் மட்டுமே ஊருக்குள் குடியிருக்க முடியுமெனவும், ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீரை தரமறுத்தும் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக கொள்ளிடம் காவல்நிலையத்தில் பாலசந்திரன் புகார் கொடுத்ததின் பேரில், 2.12.2019 ம் ஆண்டு காலதாமதமாக வழக்கு பதியப்பட்டு, இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜசேகர் நியமிக்கபட்டுள்ளார். ஆனால் புலன் விசாரணை அதிகாரி பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியவில்லை. மேலும் புலன்விசாரணை செய்யாமல் எதிரிகளுக்கு சாதகமாக இவ்வழக்கு பொய் வழக்கு என முடிவு செய்வதாக கூறிய இறுதி அறிக்கை இந்நாள் வரை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.

இது குறித்து புகார்தாரர் திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததின் பேரில் நீதிபதி உத்தரவின் கீழ் புகாரை முறையாக விசாரணை செய்யாமல், எதிர்தாரர்களுக்கு சாதமாக செயல்பட்ட அப்போதைய லால்குடி காவல்துணைக் கண்காணிப்பாளரும், தற்போதைய திருச்சி மாவட்ட மனித உரிமை ஆணைய உதவி ஆணையருமான ராஜசேகர் மீது திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வம் உத்தரவின் கீழ் சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்பழகன் வழக்கு பதிந்துள்ளார்.

Views: - 0

0

0