முறைகேடுகளில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்:அதிகாரத்தை பறித்த திருச்சி கலெக்டர்…

Author: kavin kumar
30 October 2021, 1:29 pm
Quick Share

திருச்சி: மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சாண்டார்கோயில், தீராம்பாளையம் ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஊராட்சி தலைவல்களின் செக் அதிகாரத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பறித்து உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்படபிச்சாண்டார்கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் சோபனா. இவரது கணவர் தங்கமணி . தங்கமணி தேமுதிக கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். ஊராட்சி நிர்வாகத்தை தங்கமணி தான் கவனித்து வந்தார். ஊராட்சி தலைவருக்கான கையொழுத்தினை மட்டுமே சோபனா போட்டு வந்துள்ளார். இது தொடர்பான ஊராட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் தங்கமணி க்கும் அடி தடி ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சிலர் ஊழல்தடுப்பு பிரிவு மற்றும் முதல்வர் தனிப்பிரிவிற்கு ஆதாரத்துடன் புகார் அளித்தனர். இதனால் ஊராட்சி தொடர்பான வரவு செலவு கணக்குகளை திருச்சி ஊழல்தடுப்பு போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் குழு அமைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களின் நிர்வாக செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர்.இதே போல தீராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்ரி. இவரது கணவர் மெத்துசெல்வன். இவர் அதிமுக கட்சியின் ஊராட்சி செயலாளராக பதவி வகித்து வருகிறார். தீராம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக கூறி கடந்த மாதம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இவர்கள் இருவரும் முறைகேடுகளில் பெருமளவில் ஈடுபடுவதாகவும், இதன் அடிப்படையில் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதில் பிச்சாண்டார்கோயில் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கமணி ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்தி இருப்பதும், மேலும் அரசு நிதியை கொண்டு லாபம் ஈட்டுவதற்கு முயற்சி செய்து இருப்பதாகவும் கூறி உள்ளனர். மேலும் தீராம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் சாவித்திரியும் இதே செயலில் ஈடுபட்டது தெரிய வந்ததால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருக்கிறார். இதனடிப்படையில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு பிச்சாண்டார்கோயில் கோயில் ஊராட்சி மன்றத்தலைவர் சோபனா தங்கமணி, தீராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி முத்துசெல்வம் ஆகியோரின் செக் அதிகாரத்தைப் பறித்து உத்தரவிட்டிருக்கிறார். இதன் மூலம் இவர்கள் இருவரும் நிர்வாக ரீதியாக எந்த ஒரு காசோலையிலும் கையெழுத்து இட தகுதியை இழந்தனர். மேலும் இவர்கள் அரசு பணங்களை பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

Views: - 191

0

0