குப்பை கிடங்கினை வளமீட்பு பூங்காவாக மாற்றி வருவாய் ஈட்டும் கல்லக்குடி பேரூராட்சி

Author: Udhayakumar Raman
29 July 2021, 3:33 pm
Quick Share

திருச்சி: லால்குடி அருகே கல்லக்குடி பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கினை வளமீட்பு பூங்காவாக மாற்றியமைத்தும், குப்பைகளிலிருந்து மண் புழு உரம், இயற்கை உரம் போன்றவைகளை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் வருவாயினை பெருக்கி உள்ளது கல்லக்குடி பேரூராட்சி.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேஉள்ளகல்லக்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள உணவகங்கள், வணிக நிறுவனங்கள், மற்றும் பொது மக்களிடமிருந்து தினசரி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களால் குப்பைகள் பெறப்படுகிறது. இக் குப்பைகளை அதே பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 1.33 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் குப்பைகளை மலைப் போல கொட்டி வைத்திருந்தனர்.மலை போல் தேங்கி இருந்த குப்பை கிடங்கிலிருந்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களால் தரம் பிரித்தனர். மக்கும் குப்பைகளிலிருந்து மண்புழு உரம், இயற்கை உரம், மீன் கழிவுகளிலிருந்து மீன் அமிலம், முட்டை ஒடுகளிலிருந்து கல்ரோஸ் உரம் போன்றவைகளை தயாரித்து பொது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இது மட்டுமல்லாது மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தரம் பிரித்து அருகில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் 75 சதவீத நிதியை மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், 25 சதவீத நிதியை அரசுக்கும் ஒதுக்குகின்றனர்.குப்பைகளை தினசரி தரம் பிரித்து அவைகளை பதப்படுத்தி உரங்கள் தயாரித்து விற்பனை செய்வதால், குப்பைகள் சேமிக்கும் இடத்தினை அளவு குறுகியது. குப்பை கிடங்கிற்கு தேவையான இடங்களைத் தவிர பிற இடங்களில் ஒமவள்ளி, கருந்துளசி, நொச்சி, ஆடாதொடை, முடக்கத்தான் உள்ளிட்ட மூலிகை செடிகளை வளர்த்து வருகின்றனர். இங்கு தயாரிக்கும் இயற்கை உரங்களை பயன்படுத்தி தென்னை, கொய்யா, நாவல் மரம் மற்றும் நாட்டு காய்கறித் தோட்டங்கள் அமைத்தும் அதிலிருந்து வருவாயினை பெருக்கி வருகின்றனர்.

இக்குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் ஜல்லிக்கட்டு காளை ஆடு, மாடு, கோழி, வாத்து, முயல், புறா, மீன் போன்றவைகள் வளர்க்கப்படுகிறது. இதன் கழிவுகளும் உரங்கள் தயாரிக்கு உதவுவதுடன், மாடுகளின் கழிவுகளிலிருந்து பயோ கேஸ் தயாரிக்கப்படுகிறது. இந்த பயோ கேஸ் மூலம் இக் குப்பை கிடங்கில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தேனீர் தயாரிக்க உதவுகிறது. இது மட்டுமல்லாது இந்த குப்பை கிடங்கில் நான்கில் ஒரு பகுதி இடத்தில் குப்பை கிடங்கும் பிற இடங்களில் மண் புழு உரம் உள்ளிட்ட உரங்கள் தயாரிக்கும் இடமாகவும், பிற இடங்களில் பசுமைத் தோட்டம் அமைத்து அதில் அப் பகுதி மக்கள் நடை பயிற்சி செல்லும் வகையிலும் அமைத்து வளமீட்பு பூங்காவாக மாற்றியுள்ளனர் கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமையிலான பணியாளர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தலைமுறையினர் கண்டிராத மற்றும் நம்மிடமிருந்து அழிந்துபோன தமிழர்களின் பாரம்பரிய பொருள்களான உரல், அம்மிக்கல், திருகை,மாட்டு வண்டி உள்ளிட்ட பொருட்களும் காட்சி பொருட்களாக இங்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த வளமீட்பு பூங்காவில் நடைபயிற்சி வந்த அப் பகுதியினைச் சேர்ந்த கீதா, திவ்யா ஆகியோர் கூறியதாவது. தற்போது நடைபயிற்சி என்பது ஒவ்வொரு மனிதனுக்கு முக்கியமாக இருக்கிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவ வளவு பாதுகாப்பாக இல்லை.ஆனால் நடைபயிற்சி செல்ல இந்த இடம் பாது காப்பானதாக இருப்பதுடன்,

பசுமையான இயற்கை அழகுள்ள இந்த இடத்தில் நடைபயிற்சி செல்ல மிகவும் இனிமையா உள்ள என்றும் பழமையான பொருட்களை காட்சிக்கு வைத்திருப்பதால் எங் களின் குழந்தைகளும் தெரிந்து கொள்வதற்கு வசதியாக உள்ளது என்றனர்.இது குறித்து கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல்அமீது கூறியதாவது:-குப்பைக் கிடங்காக மட்டுமே இருந்த இடத்தினை தற்போது வளமீட்பு பூங்காவாக மாற்றி உள்ளோம். இந்த குப்பைகளிலிருந்து குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு விற்பதன் மூலமாகவும், மக்கா குப்பைகளை தொழிற்சாலைகளுக்கு விற்பதன் மூலமாகவும் அரசுக்கு வருவாய் ஈட்டு வருகிறோம் என்றார்.

Views: - 128

0

0