வாய்க்காலில் மூழ்கிய 2 குழந்தைகள் சடலமாக மீட்பு

Author: Udayaraman
9 October 2020, 6:35 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் சடலத்தை போலீசார் மற்றும் தீயணைப்புதுறையினர் மீட்கப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், சமயபுரம், பள்ளிவிடை பாலத்தின் கீழ் பெருவளை வாய்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் கரையோரத்தில் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன், செவிலியராக பணியாற்றும் அவரது மனைவி அனிதா இருவரும் தர்ஷினி (6), நரேன் (4) ஆகிய இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் குழந்தைகளை இருவரையும், ரவிச்சந்திரனின் தாயார் கவனித்து வந்துள்ளார். நேற்று மாலை குழந்தைகள் இருவரும் இயற்கை உபாதைகளை கழிக்க பெருவளை வாய்க்காலின் கரையோரத்திற்கு சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாகயும் குழந்தைகள் வீடு திரும்பாததால், பாட்டி வாய்க்கால் கரையோரத்தில் சென்று பார்த்த போது, அவர்கள் அணிந்திருந்த காலணிகள் மட்டும் கரையோரத்தில் கிடந்தன. குழந்தைகள் இருவரையும் காணவில்லை. குழந்தைகள் இருவரும் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகமடைந்துள்ளார். இது குறித்து சமயபுரம், தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் வாய்க்காலில் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.


சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், பெருவளை வாய்காலில் வரும் தண்ணீரை முற்றிலுமாக நிறுத்த பொதுப்பணித்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார். மேலும் மாயமான குழந்தைகளை வாய்க்காலில் தேடவும் தீயணைப்பு படை வீரர்களுக்கு உத்தரவிட்டார். இரவு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் தேடி வந்த நிலையில் இன்று இரண்டு குழந்தைகளையும் சடலமாக மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகளின் உடல்களை உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளின் இறப்பு குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 31

0

0