ஊரடங்கு காரணமாக மாங்காய் விவசாயிகள் பாதிப்பு: தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை…

15 May 2021, 7:04 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஊரடங்கு காரணமாக மாங்காய் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.இங்கு செண்பகத்தோப்பு, மம்சாபுரம்,கூமாபட்டி, நெடுங்குளம், கான்சாபுரம் அத்திகோவில் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மா விவசாயம் சுமார் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நடைபெற்று வருகிறது.தற்போது பங்குனி, சித்திரை மாதங்கள் மாங்காய் சீசன் என்பதால் இங்குள்ள மா விவசாயிகள் பயிரிடப்பட்ட மரத்தில் சப்பட்டை,கிளிமூக்கு, பஞ்சவர்ணம்,உள்ளிட்ட மாங்காய்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்குகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை பல்வேறு கட்டுபாடுகளுடன் அறிவித்துள்ளது.

நேர கட்டுப்பாடுகளின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் காய்கறி சந்தை,பழக்கடைகள் சீக்கிரம் அடைக்கப்படுவதால் தாங்கள் மரங்களில் காயத்துள்ள மாங்காய்களை வியாபாரிகள் வாங்கி விற்க மறுக்கின்றனர் எனவும், இந்த நேர கட்டுப்பாட்டினால் வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்வது தடைபட்டு உள்ளதாகவும். மரத்தில் விளைந்துள்ள மாங்காய்களை வாங்குவதற்கு யாரும் முன்வராததால் மாங்காய்கள் மரத்திலேயே பழுத்து கீழே விழுந்து பாழகி விடுகிறது என்று மா விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் ஊரடங்கு முன்பு 1 கிலோ 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விலை போன மாங்காய்கள் தற்போது 5 ரூபாய் முதல் 12 ரூபாய்க்கு கூட யாரும் வாங்க முன்வராததால் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்ட விவசாயிகள் லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து நஷ்டம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தங்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் மாங்காய்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் அல்லது தோட்டக்கலை வேளாண்மைத்துறை மூலம் மாங்காய்களை வாங்கி விற்பனை செய்து கொடுக்க வேண்டும், சந்தைகளில் விற்பனை செய்வதற்கு நேரங்களை அதிகரித்து தர வேண்டும், தங்களுக்கு என தனி சந்தையை அமைத்து மா விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

Views: - 43

0

0