வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு : கோவை கூடைப்பந்து கழக நிர்வாகிகள் தகவல்.!

16 July 2021, 2:17 pm
Quick Share

கோவை: கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் விளையாடும் போது காயம் ஏற்பட்டால் சிகிச்சை பெற காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், அரசு பள்ளிகளில் கூடைப்பந்து மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்திற்கு 2021-2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சி.ஆர்.ஐ நிறுவன இணை நிர்வாக இயக்குநர் செல்வராஜ் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், துணை தலைவர்களாக அசோக், ஆனந்த், பழனிசாமி மற்றும் நவரத்ன குமார் பாப்னா ஆகியோரும், செயலாளராகவும் பாலாஜி மற்றும் இணை செயலாளர்களாக ராமலிங்கம், ராமகிருஷ்ணன் மற்றும் திபாலா , பொருளாளராக பத்மநாபன் தேர்வு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

பின்னர் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- தமிழகத்தில் நமது கோயம்புத்தூர் மாவட்டத்தில் தான் அதிகமாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் மாவட்ட, மாநில, தென்னிந்தியா மற்றும் தேசிய அளவில் நடைபெறும். பல போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றார்கள். இவர்களை போல மேலும் பல ஆர்வமுள்ள மாணவ மாணவர்களை ஊக்கமூட்டும் விதமாக மேலும் அவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்க உள்ளோம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கத்தால் இந்த போட்டிகள் நடைபெறவில்லை.

அடுத்த 2022 – ம் ஆண்டு மே மாதம் 55-வது தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபெறும் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம். கோவையில் சர்வதேச அளவில் கூடைப்பந்து உள் விளையாட்டு அரங்கம் ஏற்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கைவைக்கப்படும். மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளான பொள்ளாச்சி, அன்னூர், தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் இவ்விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மாவட்டத்தை சுற்றி உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடைப்பந்து விளையாட்டு ஊக்குவிக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கப்படுவதோடு அவர்களுக்கு தேவையான உபகரணங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைக்க உதவி செய்யப்பட உள்ளது.

அங்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு, கிராமப்புற மாணவர்கள் ஊக்குவிக்கப்பட ஏற்பாடு செய்யப்படும். கூடைப்பந்து வீரர்கள், முன்னாள் வீரர்கள், கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு சலுகை கட்டணத்தில் சிகிச்சையளிக்க முன்வரும் முதன்மை தனியார் மருத்துவமனையுடன் ஓப்பந்தம் செய்ய தயாராக உள்ளது. கூடைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவகாப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கான கட்டணத்தை கூடைப்பந்து கழகமும் உறுப்பினர் சங்கமும் ஏற்றுக்கொள்ளும்.இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

Views: - 52

0

0