உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை……

9 August 2020, 8:18 pm
Quick Share

கோவை: கோவையில் போளுவம்பட்டி வனப்பகுதியில் உணவு உட்கொள்ள முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் யானைகள் இடையிலான சண்டை, உடல்நலக் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும் இளம் வயது யானைகளின் இறப்பு அதிகரித்து வருவது வன ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌. ‌இந்த நிலையில் வனத்துறையினர் சிறப்பு குழு ஒன்றை அமைத்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து இளம் யானைகளின் இறப்பு குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் போளுவம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர் வனப்பகுதியில் ஜாகிர் போரேத்தி, சர்கார் போரேத்தி என்ற மலைவாழ் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு 30க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் சிலர் நேற்று மாலை யானை பள்ளம் என்ற பகுதியில் தண்ணீர் பிடிக்க சென்றபோது, அங்கு சுமார் 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல்நலக்குறைவால் நடக்க முடியாமலும், உணவு உட்கொள்ள முடியாமலும் கிடந்ததைக் கண்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த வனத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர். தற்போது வரை 15 பாட்டில்கள் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், யானைக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வரை யானையின் உடல்நிலையில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.