வாணியாறு அணையை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

Author: kavin kumar
15 October 2021, 6:52 pm
Quick Share

தருமபுரி: ஏற்காடு மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையின் நீர்மட்டம் 32 அடியாக உயர்ந்ததால் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் தண்ணீர் தேக்கி வைத்து திறப்பதன் மூலம் இடதுபுற கால்வாய் வழியாக வெங்கடசமுதிரம், மெணசி, ஆலபுரம், ஓந்தியம்பட்டி, தென்கரைக்கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட ஏரிகளுக்கும், வலதுபுற கால்வாய் வழியாக ஏ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, சாலூர், புதுப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் 10 ஆயிரத்து 517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இந்நிலையில் தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏற்காடு மலை மீது தினந்தோறும் கன மழை பெய்து வருவதால், வாணியாறு அணை நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மழை தொடங்குவதற்கு முன்பு அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு குறைவாக இருந்து வந்தது. தற்போது ஏற்காடு மலையில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் மளமளவென 32 அடி வரை உயர்ந்துள்ளது.

தொடர் மழையால் கடந்த வாரத்தில் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 88 கன அடி வரை இருந்து வந்தது. ஆனால் தற்பொழுது மழை குறைந்து வருவதால் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 40 கன அடியாக இருந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம், தற்போது 32 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பு குறித்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி இன்று ஆணையினை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Views: - 287

0

0